Skip to main content

பூனைகளின் உலகம்

முன்பொரு பூனை வளர்த்தோம். ஆறு வருடங்களுக்கு முன்பு. அப்பூனை ஆணா பெண்ணா என்றே தெரியாது. சில மாதங்கள் கழித்தே ஒருவாறு அது ஆண் பூனை என்று யூகித்துக் கொண்டோம். அதற்கு நாங்கள் இட்ட பெயர் வரி. பெயருக்குதான் அது பூனையே தவிர எங்களுடன் பழகுவதில் நாய் போல. ஆனால் அதனிடம் எஞ்சியிருந்தது என்னவோ புலியின் குணம். நாங்கள் குடியிருந்த இரண்டு தெரு மக்களின் அன்பையும், இரண்டு தெருக்களின் எல்லையை இறுமாப்புடன் நிர்வகித்த ஒரு நாயின் அன்பையும் சேர்த்தே பெற்றிருந்தது எங்கள் பூனை. நாயோடு சகவாசம் பூனைகளின் உலகில் அதற்கு ஒரு புதுத் தெம்பை அளித்திருக்கலாம். நாயைப் போலவே தன் எல்லையை அந்த இரண்டு தெருக்களோடு நிர்ணயித்துக் கொண்டது. தன் எல்லைக்குள் ஒரு கறுப்பு நிற பெண் பூனையை மட்டுமே தன் இணையாக ஏற்று அனுமதித்தது. அதன்பின் தன் எல்லையை பாதுகாக்க ஒவ்வொரு நாளும் போராட்டம்தான். அதுவும் ஒரு இணையை ஏற்ற பிறகு தெருவின் இங்கு இடுக்களிலும் கூட கண் வைத்து இரவு பகல் பாராமல் பாதுகாத்தது. மூன்று வருடங்களாக குடும்பத்தில் ஒரு ஆளாய் வளர்ந்து வந்த வரிக்கு, ஒருநாள் எதிர்பாராமல் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே மருத்துவமனை கூட்டிச் சென்றோம். சிகிச்சை முடிந்து திரும்பும் வழியில் ஒரு பேருந்தின் அதிர்ச்சி ஒலியில் கை நழுவிப் போனது வரிப் பூனை. மக்கள் நெரிசல் மிகுந்த குடியிருப்புக்குள் நுழைந்துவிட்டதால் வெகுநேரம் தேடியும் எங்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆயினும் அவை எங்கு சென்றாலும் தன் குணநலத்தால் பிழைத்துக் கொள்ளும் என்றவாறு ஒரு வகையில் நிம்மதி அடைந்தோம். அதன் இணைப் பூனை ஓரிரு வாரங்கள் எங்கள் வீடு தேடி வந்தது. அதற்கு பாலும் தயிரும் ரொட்டிகளும் வழங்கினோம். எவ்வளவு கொஞ்சியும் கெஞ்சியும் அது எங்களிடம் நெருங்கவில்லை. பிறகு அதை மூன்று மாதங்களாகக் காணவில்லை. பின்பு ஒரு நாள் இரவு நேரத்தில் வந்தது. அதைப் பார்த்தவுடனே தெரிந்து விட்டது அது குட்டிப் போட்டு தாய்மையோடு உள்ளது என்று. அதற்கான உணவோடு கூடுதலாக அசைவமும் வழங்கினோம். ஒரு மாதம் தொடர்ந்து உணவு அளித்தோம். அதன் பிறகு நான்கு ஐந்து மாதங்களாகக் காணவில்லை. பின்பு ஒரு நாள் இரவு வந்தது. அதே தாய்மையோடு. உணவளித்தோம். இதேபோல் இரண்டு முறை வந்தது. அதற்கு தொடர்ந்து உணவளித்தோம். பின்பு இரண்டு வருடங்களாக அது கண்ணில் படவேயில்லை. இதோ இப்போது எங்கள் கைகளில் ஒரு மாதமேயான வெள்ளைப் பூனை. நெற்றியில் கறுநிறப் பொட்டு வைத்தாற் போன்று அழகான பூனையைக் குட்டியை நண்பன் வளர்த்து வந்தான். அது சீறிக் கொண்டே இருக்கிறது. மனிதர்களுடன் பழக மாட்டேன் என்கிறது என என் கையில் திணித்து விட்டான். திட்டமிடாமல் எங்கள் வீட்டிற்கு வந்தப் பூனை. வந்ததும் முதல் வேலையாக அது சீறுவதை நிறுத்திக் கொண்டது. அது பெண் பூனை. அரி என்று பெயர் சூட்டினோம். வரியோடு ஒப்பிடுகையில் இனத்தில் மட்டுமல்ல குணத்திலும் வேறுபட்டிருந்தது. வரிக்கு ஒரு நாளுக்கான கால அட்டவணை என்பதே கிடையாது. அரியோ தனது நாளை மாலை 4 மணிக்குத் தொடங்கியது. சுறுசுறுப்பாக எங்களோடு விளையாடிவிட்டு இரவு எட்டுமணிக்கு உணவு உண்ணும் வரை எங்கள் கால்களைச் சுற்றியே வந்தது. அதன் பிறகு நடுச் சாமமோ அதிகாலையோ எங்கள் போர்வைக்குள் அதுவும் தூங்கியிருக்கும். நாங்கள் எழுந்தவுடன் அதுவும் எழுந்து கொள்ளும். அதன் பசி அடங்கும் வரை எங்கள் காலைச் சுற்றி வரும். அதன்பின் மாலை 3 மணிக்கு அதற்குப் பசிக்கும் வரை என்ன தொந்தரவு செய்தாலும் அதை எழுப்பவே முடியாது. இப்படியொரு கால அட்டவணையில் இன்று வரை அது எங்களுடனே வாழ்ந்து வருகிறது. ஆனால் இப்பூனையால் நாங்கள் பெரும் பிரச்சனைகளை எதிர் கொண்டாம். அது மிகவும் சுலப வாழ்க்கையை வாழப் பழகிக் கொண்டதால் மிகச் சரியாக ஒரு வருடம் 2 மாதங்களில் பருவத்திற்கு வந்துவிட்டது. பாரதி வரிகளைப் போல சொல்வதென்றால், எங்கள் வீட்டுக்கு பல்வேறு வண்ண வண்ண நிறத்திலான ஆண் பூனைகள் படையெடுக்கத் துவங்கிவிட்டன. இரவானால் போதும் அரியுடன் இணை சேர பல்வேறு ஆண் பூனைகள் வரிசைகட்டி சண்டைகள் போடத் துவங்கும். எங்கள் தூக்கமும் கெட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் காலையில் குறை சொல்லும் அளவிற்கு பூனைகளின் சுயம்வரம் தொடர்ந்தது. அதனால் இணை சேரும் போட்டி ஒரு வாரத்திற்கு மேல் நீண்டது. சுயம்வரம் நீள நீள பக்கத்து வீட்டுக்காரர்கள் பொறுமையின் எல்லையைக் கடந்துவிட்டார்கள். நடு இரவிலேயே எழுந்து சத்தம் போட ஆரம்பித்துவிட்டனர். எங்களுக்கோ தர்ம சங்கடமாகிவிட்டது. ஏதோ என் முகத்திற்காக காலையில் குறையேதும் சொல்லாமல் அவரவர் வேளைகளில் மும்முரமாகிவிட்டனர். அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில் ஒரு இணையைத் தேடிக் கொண்டது அரி. அதன் இணையும் அதே வெள்ளை நிறம். அரியின் வெள்ளை மனதுக்கு வெள்ளை இணை. ஆனால் அந்த வெள்ளைதான் இன்னொரு பிரச்சனை உருவாக காரணமாக அமையும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆண் வெள்ளைப் பூனை எங்களுடைய இரண்டு தெருவையும் தன்னுடைய எல்லையாக நிர்ணயித்துக் கொண்டது. ஒரு வருடமாக எல்லோருடனும் அன்பாயிருந்த அரியின் மீது திடீரென்று ஒவ்வொரு குற்றங்களாக சுமத்தப்பட்டன. பாலைத் தட்டிவிட்டுக் குடிக்கிறது, பாத்திரங்களை உருட்டி விடுகிறது, கறித் துண்டங்களை கவ்விக் கொண்டு செல்கிறது என குறை சொல்லாத வீடுகள் இல்லை. பழிக்காத ஆட்கள் இல்லை. கண்ணுக்கு கண்ணாக பார்த்ததை ஆதாரமாகப் நிரூபித்தார்கள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இது என்னடா சோதனை! நாங்கள் என்னடா உனக்கு குறை வைத்தோம்? பாலுக்கு பாலா, தயிருக்கு தயிரா, ரொட்டிக்கு ரொட்டியா, கறிக்கு கறியா, ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி, காடை வரை அசைவ ருசி உண்டு அதற்கு. பிறகு ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது. கொஞ்சம் குழம்பித்தான் போனோம். ஆனால் அன்று இரவே அதற்கு விடை தெரிந்துவிட்டது. அரி தன் இணையான வெள்ளைப் பூனையை வீட்டுக்கே கூட்டி வந்தது. அதன் முகம் வீங்கிப் போய் கால்களில் வீக்கமும் காயமும் அடைந்திருந்தது. அரிக்காக அது பெற்ற விழுப்புண் அது. அநேகமாக அப்பூனை கைவிடப்பட்ட தெருப் பூனையாக இருக்க வேண்டும். பூனை வெள்ளையாய் இருந்தாலும் உணவுக்கான தன் போராட்டத்தினால் அது அழுக்காகவே இருந்தது. அந்த வெள்ளைப் பூனை தூரத்திலிருந்தே எங்களை கவனித்தது. எங்களை நெருங்கியது. ஆனால் மிகவும் நெருங்கவில்லை. எங்கள் அரி நாங்கள் பிரச்சனைக்குறியவர்கள் அல்ல என்பதை அந்தப் பூனைக்கு உணர்த்திக் கொண்டிருந்தது. நாங்களோ மனிதர்கள் சுமத்திய குற்றத்திற்கெல்லாம் எங்கள் பூனை காரணமல்ல என்று பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நிரூபிக்க போராடிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் எங்கள் அரியின் புத்திக் கூர்மை எங்களை வியப்பில் ஆழ்த்தியது. எங்கள் வீட்டையே முதலில் புணர்வுக்கான களமாகத் தேர்ந்தெடுத்தது. அதுவும் நாயைப் போல வெளிப்படையாக பாலியல் வேட்கையில் ஆண் பூனையுடன் ஈடுபட்டது. வீட்டு நடைபாதை, கொல்லைப்புறம், நடுத்தெரு, தெரு முக்கு என எல்லாப் பகுதிகளிலும் இரண்டு வெள்ளைப் பூனைகளும் ஜோடியாக ஒரு வார காலமாக பாலியல் வேட்கையில் ஈடுபட்டு தன் இனவிருத்திக்கான முதல் அச்சாரத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டது. நாங்களும் எங்கள் பூனை தவறு செய்யவில்லை என்று கண்ணுக்கு கண்ணாகக் காட்டி ஆதாரத்தோடு நிரூபித்தோம். பிரச்சினை அத்தோடு முடிந்தது என்று நினைக்கிறீ்ர்களா அதுதான் இல்லை. வரியைப் போலவே அரியும் நாயோடு சமரசம் செய்து கொண்டது. நாயை எதிர் கொள்வதற்கான அத்தனை தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு, தன் உணவை தாரை வார்த்து நாய் - பூனைக்குள் ஒரு சமரச உடன்படிக்கை போல ஏற்படுத்திக் கொண்டது. இப்போது நாங்கள் நாய்க்கும் சேர்த்து உணவளிக்க வேண்டிய கட்டாயமாகிப் போனது. தான் வாழ்வதற்கான அத்தனை சூழ்நிலைகளையும் தன் செயல்பாடுகளால் தனதாக்கிக் கொண்டது அரி. இதோ அரி கடந்த பத்து நாட்களாக வீடு முழுக்க சுற்றிச் சுற்றி வருகிறது. தாழ்வாரம், பீரோவுக்கு அடியில், கட்டிலுக்குக் கீழே, பாத்திரங்கள் வைக்கும் அறை என தொடர்ந்து வேட்டையாடி வந்த எலியை தொலைத்துவிட்டுத் தேடுவது போல மும்முரமாகத் தேடிக் கொண்டிருந்தது. மேலும் எப்போதைக்கும் மாறாக காலை அகற்றி ஒரு சாய்த்துப் படுக்கிறது. இந்த அறிகுறிகளைப் பார்க்கும் போதே பூனையின் வயிற்றில் கரு உண்டாகிவிட்டதாக உணர்ந்தோம். குட்டிகளை ஈன வீட்டுக்குள்ளேயே இடம் தேடிக் கொண்டிருந்த அரிக்கு, வீட்டில் பாதுகாப்பான இரண்டு மூன்று இடங்களைக் காட்டி குறிப்பால் உணர்த்தினோம். இணை சேர்ந்து சரியாக இரண்டு மாதத்தில் நாங்கள் எதிர்பாராத பித்தளைப் பானைக்குள் சென்று அழகான மூன்று வெள்ளைக் குட்டிகளை ஈன்றது. ஈன்ற பத்தாவது நாளில் உறவினர்கள் வருகையின் காரணமாக மூன்று குட்டிகளையும் கவ்விக் கொண்டு வெளியே உள்ள கொட்டடிக்குச் சென்றுவிட்டது. உறவினர்கள் சென்ற மறுநாள் கொட்டடியில் போய்ப் பார்த்தோம். ஒரு குட்டி பாதி தின்ற நிலையில் இறந்து கிடந்தது. பசியின் காரணமாகவோ பால் சுரப்பு குறைவாகவோ முதல் ஈற்றில் மூன்று குட்டிகளைப் பெற்றதாலோ வளர்க்க முடியாமல் அது தின்றதா அல்லது வேறு பூனையா என்று தெரியவில்லை. பின்பு இரண்டு குட்டிகளையும் கவனமாகக் கொண்டு வந்து வீட்டில் விட்டோம். அரி இரண்டு குட்டிகளையும் ஆரோக்கியமாக வளர்த்தது. எங்களிடமும் அந்தக் குட்டிகள் நன்றாகப் பழகிவிட்டன. திட உணவுகள் சாப்பிட பழகிய ஒருவாரத்தில் ஒரு பூனைக்குட்டிக்கு அரியின் கண் முன்பே விடை கொடுத்தோம். அரியை வாங்கி வந்த வீட்டுக்கே அதன் குட்டியும் சென்றுவிட்டது. அரியும் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. சில நாட்கள் ஒரு குட்டியை வைத்துக் கொண்டு மந்தமாக இருந்தது. பின் மறு வாரத்தில் பூனையை நன்றாக வளர்க்கும் ஒரு குடும்பத்திடம் அரியின் கண் முன்பாகவே அந்த இன்னொருப் பூனையையும் கொடுத்தோம். அப்போதும் அரி எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. ஆனால் அடுத்த இரண்டு மூன்று நாட்கள் எங்களிடம் ஒட்டாமல் இருந்தது. பின் எப்போதும் போல சகஜமாகிவிட்டது. ஒரு மாதங்கள் கழித்து இரண்டு பூனைக் குட்டிகள் வளரும் இடம் சென்று நலம் விசாரித்தோம். நல்ல ஆரோக்கிய உடல்நிலையில் வளர்ந்து வந்தது எங்களுக்கு போதிய மகிழ்ச்சியை அளித்தது. அந்த இரண்டு குட்டிகளையும் அழகாக புகைப்படம் எடுத்துச் சென்று அரியிடம் காட்டினோம். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டது. குட்டிகளின் நினைவு மறந்திருக்குமா அல்லது என்ன நினைத்தது தெரியவில்லை. எதுவானாலும் எங்களுக்கு மகிழ்ச்சிதான். இரண்டு மாதங்கள் கழித்து வரியின் வண்ணத்தில் ஒரு ஆண் பூனையைக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டது அரி. மகிழ்ச்சியான ஒரு நெகிழ்ச்சியான தருணம்தானே அது.

Comments

Popular posts from this blog

பறவைக் குறிப்புகள்

நீர்ப் பறவைகள், ஊர்ப் பறவைகள், மலைப் பறவைகள், பனிப் பறவைகள், புல்வெளிப் பறவைகள், சதுப்புநிலப் பறவைகள், மேற்படி எல்லா சூழ்நிலைகளையும் தகவமைத்து வாழ்கிற பறவைகளும் என இப்பூமியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பறவை இனங்கள் உள்ளன. இந்திய துணைக்கண்டத்தில் ஏறக்குறைய 1400 பறவைகளும் தமிழகத்தில் 510 பறவைகளும் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில பறவைகள் கண்டுபிடிக்கப்படாமலும் இருக்கக்கூடும். அழிந்துபோன பறவைகள் இதைவிட இன்னொரு மடங்கு இருக்கக்கூடும். வெறும் 50 கிலோமீட்டர் சதுரப் பரப்பளவிற்குள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கிற பறவையினங்களும், ஆண்டுக்கு சுமார் 30000 கிலோமீட்டர் வரை பறந்து வாழ்கிற பறவைகளும் இவ்வுலகில் உண்டு. காலை நடை உடலை உறுதி செய்கிறது. பறவை நடை மனதையும் சேர்த்தே உறுதி செய்கிறது. காலை 6 மணியிலிருந்து 8 மணிவரை இரண்டு மணி நேர பறவை நடையில் 40க்கும் மேற்பட்ட பறவைகளை இனங்கண்டு உறுதி செய்யலாம். பொதுவாக மனித குடியிருப்புகளையொட்டி இருக்கும் பறவைகள் ஆண்டு முழுவதும் காணப்படக்கூடியவை. அவை ஊர்ப் பறவைகள் என அழைக்கப்படுகின்றன. இந்தப் பறவைகள் இந்தியா முழுமையும் விரிந்திருக்கின்றன. தொடர்ந்து பறவ...

மரங்கள் : சில முரண்கள்

நொடிக்கொருமுறை கரியமிலவாயுவை வெளியிட்டு பிராண வாயுவை சுவாசிக்கும் மனித உடல் எந்நேரமும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை போன்றே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வாறான செயல்பாடே விலங்கின் உடலிலும் செவ்வனே நடந்து கொண்டிருந்தாலும் மனிதனைப் போலல்லாமல் குறைந்த அளவேயான கரியமிலவாயுவையே வெளியிடுகின்றன. இப்படியாக நொடிக்கொருமுறை மனித உடல் வெளியிடும் அதிகப்படியான கரியமிலவாயுவையும்ரூபவ் மனிதன் நடத்துகின்ற பெருந்தொகையிலான ஆலைகளிலிருந்து வெளிவரும் மிகவும் அதிகப்படியான கரியமிலவாயுவையும் உள்ளீர்த்துக் கொண்டுரூபவ் அதே மனிதன் உயிர் வாழ முதல் தேவையான பிராணவாயுவை இப்பூமி முழுவதும் பரவச் செய்யும் மரங்கள்தான் தாய்மார்களுக்கெல்லாம் தாய் என்றால் மிகையில்லை. மரங்கள் மிகுந்திருக்கும் காடுகள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அழிவுக்குள்ளாகி வந்தாலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கமே; உலகின் அனைத்துவித காடுகளும் அழிவுக்குள்ளாக ஆரம்பித்தன. அதைத் தொடர்ந்த அறிவியலின் அசூர வளர்ச்சிக்கும் மக்களின் பெரும் முன்னேற்றத்திற்கும் மேலைத்துவ அறிவியலே காரணமாக அமைந்தாலும்ரூபவ் சுற்றுப்புறச்சூழல் சீர்கேட்டிற்கும் அதுவே முதன்மைக் க...

திருநெல்வேலிப் புள்ளினங்கள்

திருநெல்வேலி ரயில் நிலையத்தை அடைய இன்னும் சில மணித்துளிகளே இருந்தது. ஒரு பள்ளி மாணவன் இறங்குவதற்கான அனைத்து உடைமைகளையும் எடுத்து தயாராக வைத்திருந்தான். அநேகமாக விடுதியில் தங்கிப் படிப்பவனாக இருக்க வேண்டும். அவன் ரயில் ஜன்னலை குனிந்து பார்த்தவாறே நடை மேடை வந்துவிட்டதா என அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து எனக்கு எதிர் திசையில் இருந்த இருக்கையில் அமரச் சொன்னேன். அமர்ந்தான். நான் அவனிடம் பெயரெல்லாம் கேட்கவில்லை. எத்தனையாவது படிக்கிற என்றேன். 11 வது என்றான். திருநெல்வேலின்னா உடனே உனக்கு என்னென்னலாம் ஞாபகம் வரும்னு கேட்டேன். அல்வா என்றான். இந்த பதில் மனிதனுக்கு முதல் தேவை உணவு என்பதைப் போல் இருந்தது. எவ்வுயிரினத்திற்கும் அடிப்படை உணவு. ஆனால் மனிதனுக்கோ அது சுவையோடு பிண்ணிப் பிணைந்தது. உணவுக் கலை ஒன்றே மனிதனோடு காலந்தோறும் கூடவே வருவது. ஓர் உணவு ஒரு குறிப்பிட்ட பதார்த்தம் என்கிற வகையில் அவ்விடத்திற்கு சிறப்பு சேர்க்கிறது எனில் அது உலகளவில் கவனம் பெறக்கூடிய நிலையை அடைகிறது. மற்றும் புவிசார் குறியீட்டைப் பெற்று சிறப்பு சேர்க்கிறது. மேலும் அவற்றை தொடர்ந்து பாதுகாப்பது ...