Skip to main content

பறவைக் குறிப்புகள்

நீர்ப் பறவைகள், ஊர்ப் பறவைகள், மலைப் பறவைகள், பனிப் பறவைகள், புல்வெளிப் பறவைகள், சதுப்புநிலப் பறவைகள், மேற்படி எல்லா சூழ்நிலைகளையும் தகவமைத்து வாழ்கிற பறவைகளும் என இப்பூமியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பறவை இனங்கள் உள்ளன. இந்திய துணைக்கண்டத்தில் ஏறக்குறைய 1400 பறவைகளும் தமிழகத்தில் 510 பறவைகளும் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில பறவைகள் கண்டுபிடிக்கப்படாமலும் இருக்கக்கூடும். அழிந்துபோன பறவைகள் இதைவிட இன்னொரு மடங்கு இருக்கக்கூடும். வெறும் 50 கிலோமீட்டர் சதுரப் பரப்பளவிற்குள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கிற பறவையினங்களும், ஆண்டுக்கு சுமார் 30000 கிலோமீட்டர் வரை பறந்து வாழ்கிற பறவைகளும் இவ்வுலகில் உண்டு. காலை நடை உடலை உறுதி செய்கிறது. பறவை நடை மனதையும் சேர்த்தே உறுதி செய்கிறது. காலை 6 மணியிலிருந்து 8 மணிவரை இரண்டு மணி நேர பறவை நடையில் 40க்கும் மேற்பட்ட பறவைகளை இனங்கண்டு உறுதி செய்யலாம். பொதுவாக மனித குடியிருப்புகளையொட்டி இருக்கும் பறவைகள் ஆண்டு முழுவதும் காணப்படக்கூடியவை. அவை ஊர்ப் பறவைகள் என அழைக்கப்படுகின்றன. இந்தப் பறவைகள் இந்தியா முழுமையும் விரிந்திருக்கின்றன. தொடர்ந்து பறவை பார்ப்பதன் மூலம் மாதத்திற்கு இரண்டிரண்டு பறவைகளையாவது புதிதாகப் பார்த்து பரவசமடையலாம். இந்தியாவின் எப்பகுதியிலிருந்தும் இரண்டுமணி நேர நடையில் குறைந்தபட்சம் 40 வகைப் பறவைகளைப் பார்த்துவிடலாம். ஒரு வாரம் செலவழித்து தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டால் 300 வகைப் பறவைகளை நிச்சயம் இனங்கண்டு பதிவு செய்யலாம். ஒரு மாதம் இந்தியா முழுவதும் சுற்றி வந்தால் 700 வகைப் பறவைகள் வரை நம்மால் இனங்கண்டு பதிவு செய்ய முடியும். இந்தப் பறவைகளை ஏன் காண வேண்டும்? ஏன் பதிவு செய்ய வேண்டும்? பொதுவாக பறவையின் மீது ஓர் அடிப்படையான அன்பு மனிதர்களிடம் காணப்படுகிறது. அதன் பறக்கும் திறனோ, குரலொலியோ, அதன் வாழ்வு நிலையோ, உடல் சதையோ ஏதோ ஒன்று மனிதனை பறவையின்பால் ஈர்;த்திருக்கிறது. இந்தப் பறவைகள்தான் இப்பூமியின் உயிர்சமன்நிலையை பேணுகிறது. பறவை நேசம் சிட்டுக்குருவிகளுக்கும் காகங்களுக்கும் தண்ணீர் வைப்பதோடு முடிந்துவிடுவதல்ல. பறவை பார்த்தல் என்பது விலையும் எடையும் கணமுள்ள கேமராக்களைத் தூக்கிக் கொண்டு பயணம் செய்யும் சாகசமுமல்ல. பறவை நோக்கல் இலக்கிய தாகமுமல்ல. அறிவியல் சோதனையுமல்ல. வேட்டைக் கலையுமல்ல. ஒரு வகையில் பறவை பார்த்தல் நேசமும் சாகசமும் சிலிர்ப்பும் கொண்டதுதான். அதே சமயம் சலிப்பும் களைப்பும், கேலியும் வலியும் கொண்டது. மனிதர்கள் பறவை பார்ப்பது இருக்கட்டும். பறவைகள் அன்றாடம் மனிதர்களைப் பார்க்கின்றன. அவன் செயல்களைப் பார்க்கின்றன. அவன் தன்னை பார்த்து பரவசமடைவதைக் காண்;கின்றன. தன்னுடைய இரைகொல்லிகளை விடவும் மனிதனை அச்சுறத்தலாகவும் காண்கின்றன. ஆயினும் அவனை அண்டி வாழ்வதில் சில பறவைகள் பாதுகாப்பான நிலையை உணர்கின்றன. ஆனால் பறவைகளுக்கு உண்டிவில்லும் ஒன்றுதான் பைனாக்குலரும் ஒன்றுதான். உண்டிவில் காரனுக்கு அன்றைய வயிற்றுப் பசியைத் தீர்த்தது. இன்றைய பைனாக்குலர் காரனுக்கு மனப் பசியைத் தீர்த்து வைக்கிறது. (மனிதனின் பேராசைக்கு மடிந்த பறவைகளின் கதை கணக்கில் அடங்காதது.) பறவைகளைப் பார்த்தல், எண்ணிக்கையை கணக்கிடுதல், குரல்களை கேட்டறிதல், பறவைகளின் செயல்பாடுகளை கவனித்தல் இறுதியாக அதை முறையாக பதிவு செய்தல் என தற்செயலாகதான் இப்பணியைத் தொடங்கினேன். பல வருடங்களுக்கு முன்பிருந்தே பறவையாளனாக இருந்து வந்தாலும் அவற்றை முறையாக பதிவு செய்து ஆய்வாளர்களுக்கு உதவும் வகையில் தன்னால் இயன்றவரை செய்ய வேண்டும் என முடிவெடுத்தது 2017 ஆம் இறுதிவாக்கில்தான். ஏனென்றால் அப்போதுதான் eBirdஎன்கிற இணையதளம் வாயிலாக மக்கள் அறிவியல் திட்டங்களை செயல்படுத்தி வந்தார்கள். அதாவது மக்களே விஞ்ஞானியாக மாறுவது. அது பறவைகளுக்கான ஆய்வு மட்டுமல்ல மாறாக பல்வேறு துறைகளிலும் அதன் செயல்பாடுகளை விரித்து கொண்டே செல்கிறது. தாவரங்களை இனங்கானுதல் மற்றும் கண்காணித்தல் மூலம் பருவகால நிலைகளை அறிந்து கொள்வது, நான்கு வழிச் சாலைகளால் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் அடிப்பட்டுச் சாகும், ஊர்வனங்கள், வன விலங்குகள், வண்ணத்துப்பூச்சிகள், பறவைகள் என அதன் பல்லாயிரக்கணக்கான இழப்புகளை பதிவு செய்வது, இதன் மூலம் பல்லுயிர் சமன்நிலைக்கு பெரும் கேடு விளைவிக்கும் மனிதனின் அன்றாடச் செயல்களை கேள்விக்கு உட்படுத்துவது, வனவிலங்குகளுக்கு மனிதனுடைய உணவை அளிப்பதன் மூலம் மனிதனுக்கு உண்டாகும் ரத்த அழுத்தம், நீரிழிவு, மனநிலை பாதிக்கப்படுதல் போன்றவை வனவிலங்குகளுக்கும் ஏற்பட்டு மரபணு சிதைக்கப்பட்டு எதிர்கால சந்ததி பாதிக்கபடுதல் ஆகியவற்றை அறிவியல் ரீதியாக பதிவு செய்யும் தன்னார்வலர்களே தற்போது மக்கள் விஞ்ஞானிகளாக உருவாகியுள்ளனர். வயது வித்தியாசமின்றி இப்பணியை 10 வயது முதல் 80 வயதுவரையிலான மக்கள் செய்து வருகின்றனர். இந்தியாவில் மக்கள் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை சுமார் 50000 வரை இருக்கும். அமெரிக்கா, கனடாவிற்குப் பிறகு இந்தியாவில்தான் அதிகம் பேர் இந்தப் பங்களிப்பினைச் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவில் மட்டுமே 80 சதவீதம் பேர் இந்தப் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். இதில் மிகவும் கவனம் கொள்ளத்தக்க விஷயம் என்னவென்றால் அத்தனையும் சர்வ சாதாரணமாக ஓர் விளையாட்டைப் போன்று செய்யப்பட்ட சாதனைகள் இவை. ஓர் அரசினால் செய்ய முடியாத காரியத்தை இதன் மூலம் சாத்தியப்படுத்துவது எளிதான காரியமல்ல. இங்கு அளிக்கப்படுகிற ஒவ்வொரு தகவலும் உண்மையான ஆய்வுத் தரளத்திலான கருத்துக்களை உள்ளடக்கியது. அதனை இந்தியாவில் பறவைகளைப் பற்றி ஆய்வு செய்து வரும் முன்னணி 10 நிறுவனங்கள் இணைந்து (State of India’s Birds) இன்றைய பறவைகளின் நிலை பற்றி ஆய்வு செய்து ஒர் அறிக்கையை (The first comprehensive assessment of India’s Birds uses ebird data) சமர்ப்பித்தார்கள். அவர்களின் ஆய்வுக்கு 90 சதவீத தரவுகள் 25 வருடங்களாக eBird இணையதள விவரங்களைப் பெற்றுத்தான் நடந்திருக்கிறது எனும் போது மக்கள் விஞ்ஞானிகளின் ஈடுபாட்டையும் அர்பணிப்பையும் அறிந்து கொள்ளலாம். அவ்வகையில் நானும் கடந்த இரண்டு ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே நான் வசிக்கிற வெங்கடாஸ்திரிக்கோட்டை என்கிற சிறிய கிராமத்தை மையமாக்கினேன். ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவை எல்லையாக நிர்ணயித்தேன். பறவைப் புகழிடமோ, பிரசித்த பெற்ற பறவைக் காப்பிடமோ அல்ல எனது கிராமம். தலைசிறந்த பறவையாளனோ ஆராய்ச்சியாளனோ அல்ல நான். இந்த மையமும் எல்லையும் புகழிடமும் எனக்குத்தானேயொழிய பறவைகளுக்கு இல்லை. குறிப்பிட்ட எல்லைக்குள் எனது கிராமத்தின் வழியாக ஒரு சில நிமிடங்கள் பறந்தோ இளைப்பாறியோ கடந்து போனாலும் பறவையும் நிலமும்; நானும் சங்கமித்த நிகழ்வு எனது வாழ்வில் இயற்கைக் கூடலுக்கான உகந்த நாளாக அமையப் பெற்று மகிழ்ந்திருந்திருக்கிறேன். பறவைகளுக்கு தொந்தரவு ஏதும் செய்யாது என்னுடைய ஆர்வத்தை நான் போகுமிடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றேன். கிடைக்கின்ற பொழுதுகளை பறவை நோக்கலுக்காகச் செலவழித்தேன். ஒரு சதுரகிலோமீட்டர் பரப்பளவுதான். கடந்த இரண்டு வருடத்தில் சுமார் 105 பறவைகளைப் பார்த்து முடித்திருந்தேன். உண்மையில் நான் நம்பவில்லை. ஒரு சிறு கிராமத்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்குள் 105 பறவைகளைப் பார்த்துவிட இயலுமா என்று. பறவைக் காப்பிடங்களில் மிக எளிதாக ஒரு வருடத்தில் 200 பறவைகள் வரை பதிவு செய்துவிடலாம். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வருடத்தில் 400 பறவைகளை பதிவு செய்துவிடலாம். எனது கிராமத்தில் 105 பறவைகள் என்பது சாத்தியமற்றது. ஆனால் 300 மணிநேரமும் 400 பதிவுகளும் 70 புகைப்படங்களும் 45 குரலொலிகளும் அதைச் சாத்தியப்படுத்தின. அது உலகத்திலுள்ள பறவைகளின் எண்ணிக்கையில் ஒரு சதவீதம். எனக்கே வியப்புதான். பறவைகள் என்றாலே அப்படித்தானே! ஜன்னலை திறங்கள் 2 பறவைகளின் குரலொலி கேட்கலாம். கதவைத் திறங்கள் 4 பறவைகள் உங்கள் வீட்டின் முன் உணவருந்துவதைப் பார்க்கலாம். சற்றே காலாற நடை போடுங்கள் 40 பறவைகள் பறப்பதைப் பார்க்கலாம். ஒரு பயணம் செல்லுங்கள் 400 பறவைகளைப் படம் பிடிக்கலாம். சற்று எழும்பி இவ்வுலகைப் பாருங்கள் 4000 பறவைகளோடு நீங்களும் பறக்கலாம். அப்புறமென்ன நீங்கள்தான் கவிஞன், இசைஞன், பாடகன், விஞ்ஞானி எல்லாமே!

Comments

Popular posts from this blog

திருநெல்வேலிப் புள்ளினங்கள்

திருநெல்வேலி ரயில் நிலையத்தை அடைய இன்னும் சில மணித்துளிகளே இருந்தது. ஒரு பள்ளி மாணவன் இறங்குவதற்கான அனைத்து உடைமைகளையும் எடுத்து தயாராக வைத்திருந்தான். அநேகமாக விடுதியில் தங்கிப் படிப்பவனாக இருக்க வேண்டும். அவன் ரயில் ஜன்னலை குனிந்து பார்த்தவாறே நடை மேடை வந்துவிட்டதா என அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து எனக்கு எதிர் திசையில் இருந்த இருக்கையில் அமரச் சொன்னேன். அமர்ந்தான். நான் அவனிடம் பெயரெல்லாம் கேட்கவில்லை. எத்தனையாவது படிக்கிற என்றேன். 11 வது என்றான். திருநெல்வேலின்னா உடனே உனக்கு என்னென்னலாம் ஞாபகம் வரும்னு கேட்டேன். அல்வா என்றான். இந்த பதில் மனிதனுக்கு முதல் தேவை உணவு என்பதைப் போல் இருந்தது. எவ்வுயிரினத்திற்கும் அடிப்படை உணவு. ஆனால் மனிதனுக்கோ அது சுவையோடு பிண்ணிப் பிணைந்தது. உணவுக் கலை ஒன்றே மனிதனோடு காலந்தோறும் கூடவே வருவது. ஓர் உணவு ஒரு குறிப்பிட்ட பதார்த்தம் என்கிற வகையில் அவ்விடத்திற்கு சிறப்பு சேர்க்கிறது எனில் அது உலகளவில் கவனம் பெறக்கூடிய நிலையை அடைகிறது. மற்றும் புவிசார் குறியீட்டைப் பெற்று சிறப்பு சேர்க்கிறது. மேலும் அவற்றை தொடர்ந்து பாதுகாப்பது ...

காட்டுத் தீ எனும் மாயையும் இயற்கைப் புரிதலும்

காட்டுத் தீ ஒரு சதவீதம் கூட இந்தியாவில் இயற்கையாகப் பற்றாது. மூடநம்பிக்கை கொண்ட மனிதர்களாலும், சுற்றுலா என்கிற பெயரில் சென்று மது, புகை பிடித்து தூக்கிபோட்டுக் கும்மாளமிடும் மனிதர்களாலும், மரங்களைக் கடத்தும் கும்பலாலும், திருட்டு வேட்டைக்கார்களாலும், மலைவாழ் மக்களாலும்தான் காட்டில் 100 சதவீதம் தீப்பிடிக்கிறது. (மலைவாழ் மக்கள் என்பவர்கள் இங்கு சில நூறு எண்ணிக்கையில் இருக்கும் பழங்குடிகள் அல்ல) இடி இடித்து, மின்னல் வெட்டி, மூங்கிலோடு மூங்கில் உரசி காடு தீப்பிடிக்கிறது என்பதும், காடு எரிந்த பின்னர் புதிதாய் முளைக்கும் புற்கள் ஆடுமாடுகளுக்கு ஊட்டசத்து மிக்கது என்பதும், காடு எரிந்து மொட்டையாய் இருந்தால் வனவிலங்குகள் ஊருக்குள் வராது என்பதும் கடைந்தெடுத்த மூடத்தனம். ஆயினும் மலைவாழ் மக்களின் மீது வனத்துறையினர் விதிக்கும் கட்டுப்பாடுகளின் மீதுள்ள கோபமும் ஒரு காரணம் என்று தெரிய வந்திருக்கிறது. இதை உணர்ந்த மத்திய அரசு, தீத்தடுப்புக்காக பல்வேறு கோடிகளை பட்ஜெட்டில் ஒதுக்கி, ஒரு ஆணையமும் அமைத்தது. ஆனால் வேலைகள்தான் நடந்த பாடில்லை. தமிழகம் முழுவதுமுள்ள பல குன்றுப் பகுதிகள் மட்டுமின்றி கிழக்கு மற...

இயற்கை செய்திகள் சிந்தனைகள்:

இயற்கையை வெறும் செய்திகளாக மட்டுமே படித்தும், பார்த்தும், பழகியும் வந்தவர்களுக்கு அச்செய்திகளைக் கொண்டே கூரிய சிந்தனைகளை விதைப்பது எவ்வளவு கடினம் என்பது இயற்கையை வாழ்க்கைக்கல்வி பாடத்தோடு இணைத்தபோதும், வாழ்க்கையிலிருந்தே இயற்கையை அகற்றிவிட்டவர்களுக்கு மத்தியிலும், இயற்கையை பண்பாடு, பாரம்பரியம், வாழ்வுப் பிரச்சனையோடு தொடர்பு படுத்தி உணர்ச்சிமய கொந்தளிப்போடு உலவுபவர்களுக்கு மத்தியிலும் இயற்கையைப் புரிந்து கொள்வது எவ்வளவு கடினம் என்பது ச.முகமது அலியோடும் அவரது எழுத்துக்களோடும் இணைந்து பயணிக்கையில்தான் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஆனாலும் அத்தனை எளிது அவர் சிந்தனைகளைப் பற்றிக் கொள்வது. என்ன செய்வது பற்றிக் கொள்ளத்தான் யாரும் தீக்குச்சியாக இருப்பதில்லை இங்கு. ச.முகமதுஅலியின் எழுத்துக்களை வாசிப்பவர் எவரும் பற்றிக் கொள்வார்கள் என்பது கண்கூடு. இதோ இந்நூலில் காட்டுத் தீ பற்றிய ஒரு செய்தி. வட அமெரிக்காவின் காடுகளில் இடி மின்னல் ஆகியவற்றால் மட்டும் ஆண்டுக்கு 7000 தீ விபத்துகள் ஏற்படுகின்றன. நம் நாட்டைப் பொறுத்தவரை காடுகளில் இடி, மின்னல்களால் இயற்கையாகத் தீப்பிடிப்பதில்லை. அனைத்து...