Skip to main content

பாலூட்டிகளின் கதைகள்

பாலூட்டிகளின் கதைகள் பத்து ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டியது. அப்படி வந்திருந்தால் அழிவின் விளிம்பிலிருக்கும் சில அப்பாவி விலங்குகளையாவது நம்மால் காப்பாற்றியிருக்க முடியும். உதாரணம் தேவாங்கு உள்ளிட்ட மரநாய்கள், புனுகுப்பூனைகள் போன்றவை. ஒரு மாதத்திற்கு முன்பு கூட அவலட்சணம் என்று கருதி தேவாங்கின் மிகச் சரியான எடை சொல்லும் வேட்டையாடியைச் சந்தித்தேன். அச்சுப் பிசகாமல் இந்தப் புத்தகத்தில் உள்ளதுபடியே 150 - 300 கிராமைத் தாண்டாது என்றார். இத்தனைக்கும் தேவாங்குகள் பத்து வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல் மலைப்பகுதிகள், அதனைச் சுற்றியுள்ள சிறு சிறு குன்றுப் பகுதிகளில் கூட சகஜமாக காணப்பட்டவைதான். இப்போது அவை அருகிவிட்டன. அப்படியே மரநாய்களும் புனுகுப்பூனைகளும் அருகிவிட்டன. அதனால்தான் அந்தந்த காலத்திற்கேற்ப சூழலுக்குரிய புத்தகங்கள் தொடர்ந்து வெளிவரவேண்டும் என்று விரும்புவது. அந்நிலை தமிழகத்தில் இல்லாது போனதன் விளைவுதான் இன்று மிக அரிய விலங்கினங்களாக அவற்றைக் கருதும் துர்பாக்கிய நிலை நமக்கு வந்திருக்கிறது. பாலூட்டிகளின் கதைகள் புத்தகம் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு இன்னொரு காரணத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். வுpலங்குகளைப் பற்றிய புரிதல் இல்லாது, கள ஆய்வுகள் இல்லாது, நேரடி அனுபவங்;கள் கிடைக்காது தான்தோன்றித்தனமான புரட்டுகளாலும் ஊடக வெளிச்சத்தாலும் காட்டுயிர் பற்றிய தவறான அபிப்பிராயத்தை மேலும் மோசமாக்கிய காலமும் கடந்த பத்தாண்டுகளே. அதற்கு எதிர்நிலையாக விலங்குகள் பற்றிய அதீத அக்கறையும், பலவித ஊடாட்டங்களும், கேமராக்களின் வழியால் உந்தித் தள்ளப்பட்ட புதிய சுற்றுச்சூழல் எழுத்தாளர்கள் உருவான காலமும் அதுவே. இந்தத் தொகுப்பில் உள்ள கல்லாணை என்றொரு ஐதீகம் - கட்டுரை அதற்கு சரியான சான்று. ஆனால் உண்மையான நிலை குறித்து, பேசும் யானைகள் - குறித்த விரிவான கட்டுரை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஓர் யானைக் கூட்டத்தின் அகவொலி மூலம் அவற்றின் முழு வாழ்க்கையையும் அறிய ஆராய்ச்சியாளர்கள் எடுத்த முயற்சிகள், பல்லாண்டுகளாக காத்திருந்த தருணங்கள், அவர்கள் அர்ப்பணித்த உழைப்பின் விளைவாகதான் இன்று நம்மாலும் யானைகளை காப்பாற்ற முடிகிறது என்னும் போது நம்மை ஒரு கணம் கூசச் செய்கிறது அக்கட்டுரை. இருந்தும் நாம் கல்லாணை, குள்ள யானை, பிளாஸ்டிக் சர்ஜரி யானை என்று கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த காலமும் கூட கடந்த பத்தாண்டுகளே. ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலாக தியடோர் பாஸ்கரன் - ச.முகமது அலி போன்றவர்களால் அழுத்தம் திருத்தமாக செய்யப்பட்டு வந்த பதிவுகளும், முயற்சிகளும் சகட்டுமேனிக்கு விசிறியடிக்கப்பட்டு தரமற்ற பல கட்டுரைகள் உருவான காலமும் அதுவே. ஆகையால்தான் பாலூட்டிகளின் கதைகள் தொகுப்பு பத்து ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டும் என்று கூறுவது. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் அனைத்தும் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே வெளிவந்தவைதான். இப்போதுதான் தொகுப்பு வடிவம் பெற்றிருக்கிறது. மற்றபடி தக்கவை நிலைக்கும் என்பதற்கேற்ப இத்தொகுப்பின் தரத்தை மட்டுமில்லாது மனிதனைக் காட்டிலும் விலங்கினத்திற்கு ஆதரவான ஓர் உந்துசக்தியையும் மற்ற தொகுப்புகளைக் காட்டிலும் இத்தொகுப்பே சிறந்தது என்ற புரிதலையும் பாலூட்டிகளின் கதைகளுக்குள் போகும் போது வாசகர்களாகிய நீங்கள் அடைவீர்கள் என்பது திண்ணம். இத்தொகுப்பிலுள்ள 37 கட்டுரைகளில் 25 கட்டுரைகள் ச.முகமது அலியினுடையவை. அவர் முப்பது வருடங்களுக்கு மேலாக நடத்தி வரும் காட்டுயிர் மாத இதழில் வெளிவந்த மற்றவர்களின் சிறந்த கட்டுரைகளையும் தொகுத்து அதை பாலூட்டிகளின்; கதைகளாக்கி இருக்கிறார். அதை இயற்கை வரலாற்று அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. இந்த உலகம் ஜீவித்திருப்பதில் காட்டுயிர்கள் எப்படி பங்காற்றுகின்றன என்பதை, புலிகள் ஏன் காப்பாற்றப்பட வேண்டும், கூட்டுறவில் செந்நாய்கள, தொங்கும் வெளவால்கள, நூவின் வலசை, சிறு ஊன் உண்ணிகள் போன்ற கட்டுரைகள் நுட்பமாக விளக்குகின்றன. நூவின் வலசை என்கிற காட்டெருதுகளின் பிரம்மாண்ட ஒன்றுகூடலும், மனிதனே பொறாமை கொள்ளும் பீவர் என்ற பொறியாளர் விலங்;கும், வேட்டையாடுதலில் திறமை மிகுந்து விளங்கும் செந்நாய்களும் எப்பொதும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துபவை. இந்தியச் சூழலில் மட்டுமில்லாது வெளிநாடுகளிலும் அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்;குகளைப் பற்றி குப்ரியைத் தேடி, அழகிய பாண்டா கரடி, கோலாக்கள் போன்ற கட்டுரைகளினூடாக அவற்றைப் பாதுகாப்பதற்கான வழிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இவற்றில் கஸ்தூரியை மட்டும் எடுத்துவிட்டு மானை உயிரோடு காட்டுக்குள் விடும் சீனர்கள், அழகிய பாண்டா கரடியை பாதுகாக்க பெரும் முயற்சி எடுக்கும் சீனம்தான் உலகிலுள்ள விலங்;குகளின் கள்ளசந்தைக்கு தலைமையிடமாக இருப்பதும் எத்தனை முரண் வாய்ந்தது என்பதையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இன்று அடிக்கடி தினசரிகளிலும் ஊடகங்களிலும் குள்ள மனிதர்கள் வாழ்;ந்த காலம் பற்றி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதற்கான தடயங்;கள் திண்டுக்கல் மாவட்டம் தடியன்குடிசை மலைப்பகுதியிலும, சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியிலும் கிடைத்துள்ளன என்று செய்திகள் தருவதற்கு முன் அவர்கள் ஓட்சிப் பனிமனிதன் என்கிற கட்டுரையை வாசித்தார்களானால் ஒரு அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்பை எப்படி அணுகவேண்டும் என்பதை அறிந்து கொள்வார்கள். இந்த மாதிரியான அறிவியல் புரிதலில் நாம் மிகவும் பின்தங்கிப் போயிருக்கிறோம் என்பதை நினைவு கூரத்தான் எத்தனை சம்பவங்;கள் கொட்டிக்கிடக்கின்றன நம்நாட்டில். விலங்குகள் நல வாரியம் என்பதை ஏதோ நாய்க்கும் குதிரைக்கும் மட்டுமே சம்பந்தமானது என்ற வகையில் திரைப்படத் தணிக்கை செய்து அதிரி புதிரியான செய்தியாக்கிவிடுகிறோம். இதோ இன்று கூட செய்தித்தாளில் ஒரு திரைப்பட விளம்பரம்.. வரையாடு... சப்டைட்டிலில் பாயும் புலியாடு... இதுபோன்று காட்டுயிர்கள் பற்றிய புரிதலில் நம்மைவிட யாரும் மோசமாக இருந்துவிட முடியுமா என்ன? என்பதை தன்னுடைய ஒவ்வொரு கட்டுரையிலும் உரக்கச் சொல்வதில் கவனம் செலுத்துபவர் ச.முகமதுஅலி. அதுதான் அவரது பலமும் கூட. அதனால்தான் அவருடைய எழுத்து எல்லாராலும் விரும்பி படிக்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படுகிறது. தியடோர் பாஸ்கரன் அவர்களின் எழுத்துக்கும் முகமது அலியின் எழுத்துக்கும் அதுதான் வேறுபாடு. முன்னவர் விதந்தோதுபவர். பின்னவர் துலாக்கோலில் நிறுத்துபவர். மேலும் இத்தொகுப்பில் மூன்று கட்டுரைகள் தற்சமயத்திற்கு மிக முக்கியமானவை. அவை. க.யோகனாந்த் எழுதிய சிங்;கத்திற்குப் புதிய வாழ்விடம் கட்டுரையும, ச.முகமது அலியின் சிங், சிங்கம், அரிமா என்ற கட்டுரையும்தான். ஏனென்றால் தற்போது குஜராத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கிர் காட்டிலுள்ள 10 ஆசிய சிங்கங்களுக்கு மேல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிர் இழந்திருக்கின்றன. இந்தியாவில் குஜராத்தில் மட்டுமே உள்ள 350 ஆசியச் சிங்கங்களில் தற்போது 10 இறந்துவிட்டது. உத்திரபிரதேசம், மத்தியப்பிரதேசம் என்று பல இடங்களில் மாற்றம் செய்தும் பரிசோதித்தும் பார்க்கலாம் என்கிற காணுயிர் ஆய்வாளர்களின் சிறு ஆலோசனையைக் கூட அலட்சியப்படுத்தியன் விளைவு இன்று நாம் 10 சிங்கங்களை இழந்துவிட்டோம் என்கிற பரிதாபகரமான செய்தி. அதனால் இன்னொரு வெள்ளம் வருமுன் புலிகளைப் போன்றே சிங்கத்தையும் காக்க வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை இக்கட்டுரையின் மூலம் உணரவேண்டும். சாகடிக்கவா? ஊனமாக்கவா? ச.முகமதுஅலியின் கட்டுரை குரங்குகளின் மீது பரிதாபம் கொள்ள வேண்டிய நிலையில் நம்மை பல கேள்விக்குள்ளாக்கிறது. குரங்குக்கு நாம் தரும் உணவுபண்டங்களின் வழியாக மனிதர்களுக்கு வரக்கூடிய தோல் நோய், முடி கொட்டுதல், காசநோய், சளி, ரத்தஅழுத்தம், ஏன் புற்றுநோய் கூட குரங்குகளைப் பாதிக்கிறது என்பதை அறியாமல் அவைகளுடன் பழகி வரும் நாம், முதலில் அவற்றை பிச்சையெடுக்க வைத்தோம். பின்பு வழிப்பறி செய்ய கற்று கொடுத்தொம். அதன்பின்பு எதிர்த் தாக்குதல் செய்யவும் கற்றுக் கொடுத்தொம். எல்லாம் கொடுத்த நாம் நோயின் வழியாகவ அவற்றுக்கு அழிவையும் தவறாது கொடுத்தொம். அத்தோடு குரங்கை நம்பியே காட்டில் வாழ்ந்த பறவைகளின் வாழ்வையும் சிறுத்தைகளின் வாழ்வையும் சேர்ந்தே சீர்குலைத்தோம் என்பதையும் ச.முகமது அலி குறிப்பிடும்போது நம் மூதாதையர்களை அழக்கும் காட்சி நம் கண்முன்னே வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. முடிவாக அவர் குறிப்பிடும் ஒரு வாக்கியம் ரத்தினச் சுருக்கமானது. நீங்கள் ஒரு குரங்குக்கு உணவளித்தீர்கள் என்றால் அதை சாகடிக்கவோ ஊனமாக்கமோ விரும்புகிறீர்கள் என்ற அர்த்தம். சுமை தூக்கிகளும், இனப்பெருக்கிகளும் என்ற ச.முகமதுஅலியின் இன்னுமொரு கட்டுரையும் மிக முக்கியமானது. அடிமையாக்கப்பட்ட விலங்குகள் பற்றிய கதைதான் அது. 19ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவிலிருந்தும் ஆப்கானிஸ்தானிலிருந்தும் ஆஸ்திரேலியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒட்டகங்கள், அதன் தேவை முடிந்தவுடன் காட்டுக்குள் விரட்டப்பட்டன. அப்படியே இங்கிலாந்திருந்து இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகள் அதன் தேவைகளை ஆஸ்திரேலிய மண்ணில் நிறைவேற்றிவுடன் அவையும் காட்டுக்குள் விரட்டப்பட்டன. இறுதியாக தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கழுதைகளும், ஆஸ்திரேலியர்களுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பாரம் சுமந்துவிட்டு அவையும் காட்டுக்குள் அடித்து விரட்டப்பட்டன. இப்படி அதனதன் அடிமைத் தேவைகள் முழந்தவுடன் காட்டுக்குள் விரட்டப்பட்ட அவ்விலங்குகள் தங்களை மாற்றிக் கொண்டு முரட்டு ஒட்டகங்களாகவும், முரட்டுக் குதிரைகளாகவும், முரட்டு கழுதைகளாகவும் மாறி ஆஸ்திரேலியர்களை வதைக்கும் நிலைக்கு எண்ணிக்கையில் பல லட்சக்கணக்காக உயர்ந்தது. பல ஆயிரம் சதுரகிலோமீட்டர் சுற்றளவுள்ள ஆஸ்திரேலிய காடுகளில் சுற்றித் திரிந்த கழுதைகளையும் குதிரைகளையும் கட்டுபடுத்த முடியாமல் ஆஸ்திரேலிய அரசு திணறி வருவதற்கு இயற்கை இரைகொல்லிகளான எந்தவிலங்குகளும் காட்டில் இல்லாமல் போனது முரட்டு விலங்குகளுக்கு சுதந்திரமாகிப் போனது. அது சுயமிகுந்து போன மனிதர்களின் தவறேயொழிய விலங்குகளின் தவறல்ல என்று வாதிடும் சமயத்தில் நம் சூழலுக்கும் அடிமையாக்கப்பட்ட அறிவியல் உருவாக்கிய மலட்டு விலங்குகளையும் பொருத்திப் பார்க்க வேண்டும். இன்று நாய்களாகவும் கோவேறு கழுதைகளாகவும் பலமாநிலங்களில் ஊரெங்கிலும் சுற்றித் திரிவதைக் காணமுடிகின்றன. அவையும் மனிதர்களுக்கு பெரும் தொல்லைகள் தர வாய்ப்புகள் உண்டு. அப்போதாவது விலங்காபிமானம் நேசிக்கப்படுமா என்பதை உற்றுக் கவனிப்போம். முன்னமே சொன்னது போல காட்டுயிர்கள் பற்றிய ஆழமான புரிதலுக்கு பாலூட்டிகளின் கதைகள் தொகுப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் காட்டுயிர் இதழில் உள்ள மற்ற கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து வெளியிட ச.முகமதுஅலி சொற்களைக் கூர்மைபடுத்த வேண்டும். இல்லையெனில் தரமற்ற கட்டுரைகள் தமிழில் வெளிவருவதைத் தடுக்க முடியாது. அதனை செய்யும் நோக்கித்திற்காக க.யோகானந்த், ராஜா ஜெயபால், ராம் மனோகர், பானுமதி, ஜகநாதன் ஆகியோர்களை அவர் அழைத்திருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. அதுவே நம்முடைய சுற்றுச்சூழலுக்கும் காட்டுயிர்களுக்கும் போதுமான ஆதரவாக அமையும்.

Comments

Popular posts from this blog

பறவைக் குறிப்புகள்

நீர்ப் பறவைகள், ஊர்ப் பறவைகள், மலைப் பறவைகள், பனிப் பறவைகள், புல்வெளிப் பறவைகள், சதுப்புநிலப் பறவைகள், மேற்படி எல்லா சூழ்நிலைகளையும் தகவமைத்து வாழ்கிற பறவைகளும் என இப்பூமியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பறவை இனங்கள் உள்ளன. இந்திய துணைக்கண்டத்தில் ஏறக்குறைய 1400 பறவைகளும் தமிழகத்தில் 510 பறவைகளும் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில பறவைகள் கண்டுபிடிக்கப்படாமலும் இருக்கக்கூடும். அழிந்துபோன பறவைகள் இதைவிட இன்னொரு மடங்கு இருக்கக்கூடும். வெறும் 50 கிலோமீட்டர் சதுரப் பரப்பளவிற்குள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கிற பறவையினங்களும், ஆண்டுக்கு சுமார் 30000 கிலோமீட்டர் வரை பறந்து வாழ்கிற பறவைகளும் இவ்வுலகில் உண்டு. காலை நடை உடலை உறுதி செய்கிறது. பறவை நடை மனதையும் சேர்த்தே உறுதி செய்கிறது. காலை 6 மணியிலிருந்து 8 மணிவரை இரண்டு மணி நேர பறவை நடையில் 40க்கும் மேற்பட்ட பறவைகளை இனங்கண்டு உறுதி செய்யலாம். பொதுவாக மனித குடியிருப்புகளையொட்டி இருக்கும் பறவைகள் ஆண்டு முழுவதும் காணப்படக்கூடியவை. அவை ஊர்ப் பறவைகள் என அழைக்கப்படுகின்றன. இந்தப் பறவைகள் இந்தியா முழுமையும் விரிந்திருக்கின்றன. தொடர்ந்து பறவ...

மரங்கள் : சில முரண்கள்

நொடிக்கொருமுறை கரியமிலவாயுவை வெளியிட்டு பிராண வாயுவை சுவாசிக்கும் மனித உடல் எந்நேரமும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை போன்றே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வாறான செயல்பாடே விலங்கின் உடலிலும் செவ்வனே நடந்து கொண்டிருந்தாலும் மனிதனைப் போலல்லாமல் குறைந்த அளவேயான கரியமிலவாயுவையே வெளியிடுகின்றன. இப்படியாக நொடிக்கொருமுறை மனித உடல் வெளியிடும் அதிகப்படியான கரியமிலவாயுவையும்ரூபவ் மனிதன் நடத்துகின்ற பெருந்தொகையிலான ஆலைகளிலிருந்து வெளிவரும் மிகவும் அதிகப்படியான கரியமிலவாயுவையும் உள்ளீர்த்துக் கொண்டுரூபவ் அதே மனிதன் உயிர் வாழ முதல் தேவையான பிராணவாயுவை இப்பூமி முழுவதும் பரவச் செய்யும் மரங்கள்தான் தாய்மார்களுக்கெல்லாம் தாய் என்றால் மிகையில்லை. மரங்கள் மிகுந்திருக்கும் காடுகள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அழிவுக்குள்ளாகி வந்தாலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கமே; உலகின் அனைத்துவித காடுகளும் அழிவுக்குள்ளாக ஆரம்பித்தன. அதைத் தொடர்ந்த அறிவியலின் அசூர வளர்ச்சிக்கும் மக்களின் பெரும் முன்னேற்றத்திற்கும் மேலைத்துவ அறிவியலே காரணமாக அமைந்தாலும்ரூபவ் சுற்றுப்புறச்சூழல் சீர்கேட்டிற்கும் அதுவே முதன்மைக் க...

திருநெல்வேலிப் புள்ளினங்கள்

திருநெல்வேலி ரயில் நிலையத்தை அடைய இன்னும் சில மணித்துளிகளே இருந்தது. ஒரு பள்ளி மாணவன் இறங்குவதற்கான அனைத்து உடைமைகளையும் எடுத்து தயாராக வைத்திருந்தான். அநேகமாக விடுதியில் தங்கிப் படிப்பவனாக இருக்க வேண்டும். அவன் ரயில் ஜன்னலை குனிந்து பார்த்தவாறே நடை மேடை வந்துவிட்டதா என அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து எனக்கு எதிர் திசையில் இருந்த இருக்கையில் அமரச் சொன்னேன். அமர்ந்தான். நான் அவனிடம் பெயரெல்லாம் கேட்கவில்லை. எத்தனையாவது படிக்கிற என்றேன். 11 வது என்றான். திருநெல்வேலின்னா உடனே உனக்கு என்னென்னலாம் ஞாபகம் வரும்னு கேட்டேன். அல்வா என்றான். இந்த பதில் மனிதனுக்கு முதல் தேவை உணவு என்பதைப் போல் இருந்தது. எவ்வுயிரினத்திற்கும் அடிப்படை உணவு. ஆனால் மனிதனுக்கோ அது சுவையோடு பிண்ணிப் பிணைந்தது. உணவுக் கலை ஒன்றே மனிதனோடு காலந்தோறும் கூடவே வருவது. ஓர் உணவு ஒரு குறிப்பிட்ட பதார்த்தம் என்கிற வகையில் அவ்விடத்திற்கு சிறப்பு சேர்க்கிறது எனில் அது உலகளவில் கவனம் பெறக்கூடிய நிலையை அடைகிறது. மற்றும் புவிசார் குறியீட்டைப் பெற்று சிறப்பு சேர்க்கிறது. மேலும் அவற்றை தொடர்ந்து பாதுகாப்பது ...